தலைமுடியை துண்டித்து சித்ரவதை; சென்னையில் பட்டதாரி பெண்ணின் கண்ணீர் கதை; கணவர், மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு
சென்னை, ஜன.25-
சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் தனது கணவர் வீட்டார் செய்த கொடுமைகள் குறித்து கண்ணீர் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காயத்ரி
===================
சென்னை அண்ணாநகர் 12-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பொன்பிரபா என்ற காயத்ரி (வயது 22). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பட்டப்படிப்பு படித்துள்ள எனக்கு 7.9.2009 அன்று திருமணம் நடந்தது. எனது கணவர் பெயர் சீனுகணேஷ் என்பதாகும். திருமணத்தின்போது 75 சவரன் தங்கநகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தார்கள்.
முதல் இரவு அன்று எனது கணவர் என்னோடு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளவில்லை. 2 ஆண்டுகள் கழித்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதாக அவர் கூறிவிட்டார்.
சொகுசு கார்
====================
இதுபற்றி எனது மாமியாரிடம் கேட்டபோது, ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கித்தந்தால்தான் எனது மகன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வான் என்று எனது மாமியார் கூறிவிட்டார். மேலும் நீளமான எனது தலைமுடியை வெட்டிவிட்டார்கள். எனது கணவர் நடத்தும் பேக்கரியில் என்னை வேலை செய்ய சொன்னார்கள்.
சமையல் அறையில் கியாசை திறந்துவிட்டு, என்னை கொல்ல பார்த்தார்கள். எனவே எனது கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
=====================
இந்த புகார் மனு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் காயத்ரியின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காயத்ரியின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் தங்கள் மீதுள்ள குற்றத்தை மறுத்து கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டுள்ளனர்
மூலம் :
http://www.dailythanthi.com/article.asp?NewsID=704262&disdate=1/25/2012&advt=2