பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்த, 2 திருமணங்கள் செய்த கில்லாடி பெண் கைது; சென்னையில் இருந்து டெல்லி சென்றபோது பிடிபட்டார்
புதுடெல்லி, ஜன.26-
பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு பணி அதிகாரியாக பணிபுரிவதாக கூறி ஏமாற்றிய கில்லாடி பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் பெயர் சுமங்கலி பிரான்சினா எஸ்தர் சார்லஸ் என்ற சுமன்சிங் (வயது 51).
ஐதராபாத்தை சேர்ந்த அவர், நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றடைந்தபோது, கைது செய்யப்பட்டார்.
அவர், பிரதமர் அலுவலக அதிகாரி என்று சொல்லி பலரையும் வெற்றிகரமாக ஏமாற்றி உள்ளார். ஆனால், சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் பாரத் பூஷனிடம் ஆள் மாறாட்டம் செய்ய முயன்றபோது, அவர் சுமன்சிங்கின் மோசடியை கண்டுபிடித்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரு மாத விசாரணைக்கு பிறகு, சுமன்சிங்கை கைது செய்துள்ளனர்.
சுமன்சிங், ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய துணை பிரதமர் அத்வானியின் செயலாளர் என்று சொல்லி ஏமாற்றியதற்காகவும், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் இரண்டு தடவையும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடம்பர பிரியையான இவர், இரண்டு திருமணங்கள் செய்தவர் ஆவார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=704464&disdate=1/26/2012